கல்லுாரி தேர்வு நாளை துவக்கம்

அரசு கலைக்கல்லுாரிகளில் நடப்பு கல்வியாண்டுக்கான பருவத்தேர்வு (செமஸ்டர்) நாளை முதல் துவங்குகிறது.பாரதியார் பல்கலை கீழ் இயங்கும் அரசு கலைக்கல்லுாரி, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி கல்லுாரிகளில், (2019 -20) அனைத்து இளங்கலை பட்டப்படிப்புக்கான பருவத்தேர்வு நவ., 6ல் துவங்கி டிச., 9 வரை நடக்கிறது.அதேபோல், முதுகலை பட்டப்படிப்புக்கான தேர்வுகள் நவ., 11 முதல் டிச., 20 வரையில் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதன்கீழ், திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, எல்.ஆர்.ஜி., மகளிர் அரசு கலைக்கல்லுாரி, அவிநாசி, உடுமலை உள்ளிட்ட அனைத்து கல்லுாரிகளில் நாளை முதல் செமஸ்டர் தேர்வுகள் துவங்க உள்ளன. மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி முதல்வர் தீபா கூறியதாவது:தேர்வு எழுத வரும் மாணவர்கள் தங்கள் அடையாள அட்டை மற்றும் ஹால் டிக்கெட்டை தவறாமல் கொண்டு வர வேண்டும்.கல்லுாரி வளாகத்திற்குள் அரை மணி நேரம் முன்பாகவும், தேர்வு அறைக்கு, 10 நிமிடங்கள் முன்பாகவும் வர வேண்டும். மொபைல்போன் எடுத்துவரக்கூடாது. தேர்வு துவங்கி அரை மணி நேரத்திற்கு பின் வருபவர்களை அனுமதிக்க இயலாது. கல்லுாரி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இதனை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.கல்லுாரி தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க, தேர்வுக்கூடங்களில் குறைந்த சக்தி கொண்ட ஜாமர் கருவி பொருத்த பல்கலை மானியக்குழு அறிவுறுத்தியுள்ளது. இதனால், அனைத்து கல்லுாரியில் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.