Latest News

மரங்களுக்கு கிடைத்தது மறுவாழ்வு: தன்னார்வலர்களுக்கு பாராட்டு

உடுமலை பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்த பழமையான மரம் மேம்பாட்டுப்பணிகளுக்காக ஆர்.டிஓ., அலுவலகத்தில் மறுநடவு செய்யப்பட்டது.அமேசான் காடு பற்றி எரிந்த பின்னரே காடுகள், மரங்களின் அவசியம், பாதுகாக்க வேண்டியதன் நோக்கம் இன்று பலருக்கும் புரிந்துள்ளது. அப்படி ஒரு மரத்தை காப்பாற்ற ஊரே ஒன்று கூடிய நிகழ்ச்சி உடுமலையில் நடந்தது. உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே, நெடுஞ்சாலைத்துறை பல்வேறு மேம்பாட்டுப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து அப்பகுதியில் இருந்த, மூன்று பழமை வாய்ந்த மரங்கள் அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.நெடுஞ்சாலை துறையினர் மரங்களை வெட்டி அகற்ற திட்டமிட்ட போது, அவற்றை வேறு இடத்தில் மறுநடவு செய்ய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சில கோரிக்கை விடுத்தன.இதையடுத்து நெடுஞ்சாலை துறை மரங்களை மறுநடவு செய்ய அனுமதி அளித்தது. அதற்கான பணிகள் துவங்கின. நேற்றுமுன்தினம் இரவு, 50 ஆண்டு பழமையான அரச மரம் அங்கிருந்து வேருடன் பெயர்த்து எடுக்கப்பட்டு, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மறுநடவு செய்யப்பட்டது.இதேபோல், நேற்று நெடுஞ்சாலை துறை செயற்பொறியாளர் பூங்கொடி தலைமையில், அப்பகுதியில் இருந்த இரு வாகை மரங்கள் வேருடன் பெயர்த்து எடுக்கப்பட்டு மறுநடவு செய்யப்பட்டன.இதற்காக, போக்குவரத்து சிறிது நேரம் நிறுத்தப்பட்டு, மரங்கள் எடுத்துச் செல்லப்பட்டன. பழமையான மரங்களை வெட்டி அழிக்காமல், மறுநடவு செய்வதற்கு வழிவகை செய்த நெடுஞ்சாலை துறையினர், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.