Home
Latest News

நகரின் மையத்தில் டாஸ்மாக் மதுக்கடை:அகற்றக்கோரி குறைதீர் முகாமில் மனு

உடுமலையில், கடை வீதி, வீடுகளுக்கு மத்தியிலுள்ள 'டாஸ்மாக்' மதுக்கடையை அகற்ற வேண்டும், என சிறப்பு குறை தீர்க்கும் முகாமில், மனு அளிக்கப்பட்டது.உடுமலை நகராட்சியில், தமிழக முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடந்து வருகிறது. இதில், பசுபதி வீதி மக்கள் கொடுத்த மனு :உடுமலை நகரின் மையப்பகுதியில், தளி ரோடு, பசுபதி வீதியில், அர்பன் வங்கிக்கு அருகில், டாஸ்மாக் மதுக்கடை எண் 2004 செயல்பட்டு வருகிறது. வீடுகள், கடைகள் ஏராளமான உள்ளதோடு, அருகில் பள்ளியும் உள்ளது.குடிமகன்கள், வங்கிக்கு வருபவர்களிடம், பெண்களிடம், செயின், பணம் பறிப்பு உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். அரை, குறை ஆடைகளுடனும், வாந்தி, துர்நாற்றத்துடன், வீடு, கடைகளுக்கு முன் படுத்துக்கொள்வதோடு, கூட்டமாக அமர்ந்து மது அருந்தியும் வருகின்றனர். அதே போல், பாண்டியன் சந்து, பிரதான வழித்தடத்தை மக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு, போதை ஆசாமிகள் ஆக்கிரமித்துள்ளனர்.இதனால், சுகாதார கேடு, பாட்டில் உடைப்பு, அடி, தடி என சட்ட விரோத செயல்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, மக்கள் வசிக்கும் பகுதியிலுள்ள, டாஸ்மாக் மதுக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும்.இவ்வாறு, அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.