தமிழ் தேர்வு எளிமையாக இருந்தது: பிளஸ் 2 மாணவர்கள் உற்சாகம்

பொதுத்தேர்வின் துவக்கமாக தமிழ் பாடத் தேர்வு எளிமையாக வடிவமைக்கப்பட்டதாக தேர்வு எழுதிய மாணவர்கள் தெரிவித்தனர்.உடுமலை கல்வி மாவட்டத்தில், 17 மையங்களில் நேற்று, பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்தது. தமிழ் தேர்வு நேற்று நடந்தது. நடப்பாண்டில், பிளஸ் 2 வகுப்புக்கு பாடத்திட்டம் மாற்றப்பட்டது. இதனால், மாணவர்களுக்கு வழக்கமான தேர்வு பயத்துடன் கூடுதலாக புதிய பாடத்திட்டமும் அச்சத்தை ஏற்படுத்தியது.நேற்று நடந்த தமிழ் தேர்வு எளிமையாக வந்ததால், மாணவர்கள் உற்சாகத்துடன் தேர்வு எழுதினர். இருப்பினும், தேர்வு வினாத்தாளில், எழுத்துப்பிழை இருந்ததால் மாணவர்கள் குழப்பமடைந்தனர்.ஒரு மதிப்பெண், மூன்றாவது வினாவுக்கான விடைகளில் எழுத்துப்பிழை, ஐந்தாவது வினாவில் எழுத்துப்பிழை மற்றும் 45 வது நெடுவினா 'ஆ' பிரிவு வினாவிலும் எழுத்துப்பிழை ஏற்பட்டுள்ளது. சரியாக மாற்றி எழுதினால், மதிப்பெண்கள் குறையும் என்ற குழப்பத்தில், பலரும் வினாத்தாளில் இருந்தபடி விடைத்தாளிலும் எழுதியுள்ளனர்.மாணவர்கள் கருத்துசவுபர்னிகா முதல் தேர்வான தமிழ் பாடத்தேர்வு எளிமையாக வந்ததால், மகிழ்ச்சியாகவும், தன்னம்பிக்கையோடும் தேர்வு எழுத முடிந்தது. அடுத்து வரும் தேர்வுகளும் இதேபோல் வர வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.மதுமிதாதமிழ் பாடத்தேர்வு அனைவரும் தேர்ச்சி பெறும் வகையில் இருந்தது. வினாக்கள் நேரடியாக புரிந்துகொள்ளும் வகையில் கேட்கப்பட்டதால், சுலபமாக விடை எழுத முடிந்தது. தேர்வுக்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டது தேர்வை மேலும் எளிமையாக்கியுள்ளது.பிரியங்காகூடுதல் நேரம் வழங்கப்பட்டதால், அனைத்து வினாக்களுக்கும் விடை எழுத முடிந்தது காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்கள் என்பதால், அதிகம் பயிற்சி பெற்றிருந்ததால், விடைகளை பதட்டமில்லாமல் எழுத முடிந்தது.நிவேதாவினாத்தாளில், ஒரு மதிப்பெண் மற்றும் நெடுவினாக்களில் சிறிய எழுத்துபிழைகள் இருந்தன. இருப்பினும், வினாவை புரிந்துகொள்ள முடிந்தது. கூடுதல் நேரம் இருந்தும், விடை எழுதி முடிக்க நேரம் போதவில்லை. இதனால் விடைகளை எழுதிவிட்டு, மீண்டும் சரிபார்க்க முடியவில்லை.