உடுமலையில் மத்திய அரசின் திறன் மேம்பாட்டுத்திட்டம்

உடுமலையில், மத்திய அரசின் திறன் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ், நெசவாளர்களுக்கான பயிற்சி வகுப்பு நடக்கிறது.மத்திய அரசின் திறன் மேம்பாட்டுத்திட்டத்தில், 'அனுபவ திறமைக்கான அரசு அங்கீகாரம் வழங்குதல்' ஒரு பகுதியாகவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. மலையாண்டிபட்டணத்தில், நெசவாளர்களுக்கு இத்திட்டத்தின் கீழ், இரண்டு நாள் பயிற்சி முகாம் நடக்கிறது.பயிற்சி துவக்க விழாவில், முகாம் பொறுப்பாளர் லட்சுமிபதி வரவேற்றார். ஊர் செட்டுமை தண்டபாணி மற்றும் கோவில் நிர்வாக கமிட்டியைச்சேர்ந்த நடராஜ் துவக்கி வைத்தனர்.குகன் டெக்ஸ் சொல்யூஷன்ஸ் உரிமையாளர் கணேஷ்பாபு தலைமை வகித்தார். இத்திட்டத்தில் பயிற்சி பெறும் நெசவாளர்களுக்கு பயிற்சிக்கு ஊக்கத்தொகையாக, 500 ரூபாய், மூன்று ஆண்டுகளுக்கு, இரண்டு லட்சத்துக்கான விபத்து காப்பீடு, மத்திய அரசின் நெசவாளர்களுக்கான பணித்திறன் சான்றிதழ் வழங்கப்படுகிறது.பயிற்சியில், நெசவாளர்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டுக்கான தொழில் அபிவிருத்தி வாய்ப்புகள், புதிய தொழில் துவங்குவதற்கான வழிமுறைகள், வங்கிக்கடன் பெறுவதற்கான எளியவழிகள், மொபைல் ஆப்களில் பயன்படுத்தப்படும் அரசு சேவைகள், பணமில்லா பரிவர்த்தனை, சுயமுன்னேற்றம் மற்றும் பணியிட பாதுகாப்பு குறித்து பயிற்சி வகுப்பு நடக்கிறது. பயிற்சிக்கான சீருடைகளும் வழங்கப்பட்டன. மலையாண்டிபட்டணத்தைச் சேர்ந்த, 200 நெசவாளர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சியாளர்கள் மூர்த்தி குமார் மற்றும் தங்கராஜ் பயிற்சி அளித்தனர்.