மாணவர்கள் உடல் நலனில் கவனம்: விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆசிரியர்கள்

மாணவர்கள், உடல்நலத்தில் கவனம் செலுத்த, உடுமலை சுற்றுப்பகுதியில் கொரோனா பாதிப்பு குறித்து ஆசிரியர்கள் மீண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்த துவங்கியுள்ளனர்.கொரோனா பாதிப்பினால், பள்ளிகள், மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை தவிர, மற்ற வகுப்பு மாணவர்கள், கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த விடப்பட்ட விடுமுறையை, மகிழ்ச்சியாக கழித்து வந்தனர். தற்போது, பொதுத்தேர்வுகளும் இல்லாததால், பத்தாம் வகுப்பு மாணவர்களும், பதட்டமில்லாமல் உள்ளனர். இருப்பினும், தற்போது மீண்டும் கொரோனா பாதிப்புகள் பல பகுதிகளில், பரவ துவங்கியுள்ளது.மார்ச், ஏப்., மாதங்களில், கொரோனா பாதிப்பின் தீவிரம் உணர்ந்து, பாதுகாப்புடன் இருந்த மாணவர்கள் பலரும், தற்போது, வெளியில் சுற்றுவது போன்ற செயல்களில் ஈடுபட துவங்கிவிட்டனர். மறுபக்கம், பொருளாதார வசதியில்லாத குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், சத்துள்ள உணவுமுறை இல்லாமல், உடல்நலம் பாதிக்கும் சூழலும் உள்ளது.பல பகுதிகளில், ஆசிரியர்கள், இத்தகைய குழந்தைகளை கண்காணித்து அவர்களுக்கு, முன்னெச்சரிக்கையுடன் இருப்பதற்கான ஆலோசனைகளை தொலைபேசி மூலம் வழங்கி வருகின்றனர். ஆசிரியர்கள் கூறுகையில், 'ஊரடங்கு தளர்வுகள் வழங்கப்பட்டதால், மாணவர்கள் பலரும் இந்த வைரஸ் பாதிப்பு இனி பரவாது என்ற மனநிலையில் வெளியில் சுற்ற ஆரம்பித்துள்ளனர். பெற்றோரும் அலட்சியமாக விட்டுள்ளனர். வைரசின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதை மாணவர்களுக்கு மீண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.அனைத்து பள்ளி ஆசிரியர்களும், அவரவர் வகுப்பு குழந்தைகளை, தொடர்ந்து கண்காணித்து, அவர்களின் உடல்நலம் குறித்தும் அறிந்து வைப்பதோடு, வைரஸ் பரவுதல் தொடர்பான விழிப்புணர்வை மீண்டும் ஏற்படுத்த வேண்டும்,' என்றனர்.