'கேங்மேன்' தேர்வில் பெண் தேர்ச்சி

உடுமலையில் நடந்து வரும் மின் வாரியத்தில் 'கேங்மேன்' பதவிக்கான உடற்தகுதி தேர்வில் முதல் முறையாக, கோவையை சேர்ந்த பெண் தேர்ச்சி பெற்றுள்ளார். உடுமலை, பல்லடம், திருப்பூர் மின்பகிர்மான வட்டங்களிலுள்ள, 'கேங்மேன்' பதவிக்கு, 2,016 பேர் விண்ணப்பித்திருந்தனர்.அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி மற்றும் உடற்தகுதி தேர்வு, உடுமலை, பழநி ரோட்டிலுள்ள துணை மின் நிலைய வளாகத்தில், கடந்த, 4ம் தேதி முதல் நடந்து வருகிறது.விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி தேர்வுகள் நடக்கின்றன. இதில், எட்டு நிமிடத்தில் கம்பம் ஏறுதல், இரண்டு நிமிடத்தில் கம்பி மடித்து கட்டுதல், ஒரு நிமிடத்தில், 31.5 கிலோ பளு துாக்குதல் மற்றும் ஒரு நிமிடத்தில், நுாறு மீட்டர் ஓடுதல் என பல்வேறு தேர்வுகள் நடக்கின்றன.இந்த தேர்வில், நேற்று ( 11ம் தேதி) வரை, 48 பெண்கள் பங்கேற்றனர். இதில், முதன் முதலாக, கோவையை சேர்ந்த, ரம்யா என்பவர் உடற்தகுதித்தேர்வில் வெற்று பெற்று, சாதனை புரிந்தார். அவருக்கு, உடுமலை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் முகமது முபாரக் மற்றும் அதிகாரிகள் சான்றிதழ் வழங்கி, பாராட்டினர்.