Latest News

சிறப்பு குறை தீர்க்கும் முகாம்: இது வரை 5,339 மனுக்கள்

உடுமலையில் தாலுகாவில் நடந்த சிறப்பு குறை தீர்க்கும் முகாம்களில், 5,339 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.கிராமம், பேரூராட்சி, நகராட்சிகளில், அரசு துறை அதிகாரிகள் நேரடியாக சென்று பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்று, 30 நாட்களுக்குள் தீர்வு காண தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழக முதல்வரின் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம், உடுமலை தாலுகாவில், கடந்த 22ல் துவங்கியது. வருவாய்த்துறை, உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள், வேளாண்துறை உள்ளிட்ட, அரசுத்துறை அதிகாரிகளை கொண்ட, ஐந்து குழு அமைக்கப்பட்டு, தினமும் மனுக்கள் பெற்று வருகின்றனர்.நேற்று, புதுப்பாளையம், இலுப்பநகரம், பண்ணைக்கிணறு மற்றும் உடுமலை நகராட்சியில், 25வது வார்டு முதல் 30 வது வார்டுகளுக்கு நடந்த முகாம்களில், 287 மனுக்கள் பெறப்பட்டன.கடந்த, 22 முதல் நேற்று வரை, சிறப்பு குறை தீர்க்கும் முகாம்களில், 5,339 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில், முதியோர் உதவித்தொகை. வீட்டுமனைப்பட்டா கோரிய மனுக்களே, அதிகளவு கொடுக்கப்பட்டுள்ளது.இன்று, நகராட்சியிலுள்ள, 31,32, 33 ஆகிய மூன்று வார்டுகளுக்கு, டி.வி.,பட்டணம் நகராட்சி பள்ளியில் சிறப்பு முகாம் நடக்கிறது. தளி பேரூராட்சியில், 14 மற்றும் 15 வார்டுகளுக்கு, பேரூராட்சி அலுவலகத்தில் நடக்கிறது.