Latest News

ஹெல்மெட் அணிவதில் இல்லை அக்கறை:கட்டாயப்படுத்தாமல் போலீசார் அலட்சியம்

ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்ததால், ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்பவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என, உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் போலீசார் ஹெல்மெட் அணியாதவர்கள் மீது நடவடிக்கையை துவங்கினர். துவக்கத்தில் இதை சிரத்தையாக மேற்கொண்ட போலீசார் தற்போது ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களை கண்டுகொள்வதில்லை.குறிப்பாக, உடுமலையின் பல்வேறு பகுதிகளிலும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. இதுகுறித்து போலீசாரும் பெரிதாக கண்டுகொண்டதாக தெரியவில்லை.இதனால், மீண்டும் விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தடுக்க, போக்குவரத்து போலீசார் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.போலீசார் கூறுகையில்,'ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுகுறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது. இருப்பினும் பொதுமக்கள் விழிப்புடன் இருப்பதில்லை. இதுகுறித்து தீவிர நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது,' என்றனர்.